IIT MADRAS
தமிழ்நாடு

பாலஸ்தீன் இனப்படுகொலை குறித்து பட்டமளிப்பு விழாவில் பேசிய சென்னை ஐஐடி மாணவன்

ராம் அப்பண்ணசாமி

சென்னை ஐஐடியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், ஆளுநரின் விருதைப் பெற்ற மாணவன் தனஞ்செய் பாலகிருஷ்ணன் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப்படுகொலை குறித்துப் பேசினார்.

நேற்று (ஜூலை 19) சென்னை ஐஐடியில் 61-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில், இளநிலை இயந்திரவியல் பொறியியல் இரட்டைப் பட்டப்படிப்பு பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் சாராத செயல்பாடுகளுக்கான சிறந்த மாணவர் விருதை வென்றார் தனஞ்செய்.

விருதைப் பெற்றுக்கொண்ட தனஞ்செய் தனது ஏற்புரையில், `இது பாலஸ்தீனத்தில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு எதிரான அழைப்பு. அங்கே மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், இது முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை. இங்கு கூடியிருப்பவர்கள் ஏன் இதைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்று (என்னைக்) கேட்கலாம்;

பொறியியல் மாணவர்கள் MNC-க்களில் உயர்மட்ட லாபகரமான வேலைகளைப் பெற கடுமையாக உழைக்கும்போது, ​​இந்த தொழில்நுட்ப ஜாம்பவான்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்ரேலுக்கு கொல்லும் தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் போரில் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.

தன் பேச்சில், ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார் தனஞ்செய். மேலும் `எல்லாவற்றுக்கும் என்னிடம் விடைகள் இல்லை. ஆனால் பட்டம் பெறும் பொறியாளர்களாக நாம் செய்யும் வேலையின் விளைவுகள் பற்றி விழிப்புடன் இருப்பது அவசியம்’ என்றார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக வேதியியல் பிரிவில் நோபல் விருதை வென்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ப்ரையன் கோபில்கா கலந்து கொண்டார். இந்த விழாவில் இந்தியா சார்பில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககக்யான் திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய, 60 வயதான இஸ்ரோ தலைவர் சோம்நாத் டாக்டர் பட்டம் பெற்றார்.