ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்திற்குள் நுழைய இளையராஜாவுக்கு நேற்று (டிச.15) அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், அது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரில் உள்ள ஆடித் திருப்பூரப் பந்தலில், இளையராஜா இசையமைத்துப் பாடிய திவ்ய பாசுர இசைக் கச்சேரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றன. இதைத் தொடர்ந்து அருகிலிருந்த ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனத்துக்காகச் சென்றார் இளையராஜா.
அப்போது அவருடன் ஆண்டாள் கோயிலில் அமைந்துள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் உடனிருந்தார். இதன்பிறகு, கோயில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்திற்குள் ஜீயரும், பட்டர்களும் சென்றபோது, அவர்களை தொடர்ந்து இளையராஜாவும் உள்ளே செல்ல முயன்றார்.
இதைக் கண்ட பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு வெளியே நின்று சாமியை தரிசிக்குமாறு கூறினர். அதன்பிறகு, வெளியே நின்றபடி வழிபாடு செய்தார் இளையராஜா.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானதை தொடர்ந்து, இது தொடர்பாக விளக்கமளித்த ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், `அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக வைக்கப்பட்டிருப்பதால், ஜீயர், பட்டர்கள் தவிர அங்கே வேறு யாருக்கும் அனுமதி கிடையாது' என்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இளையராஜா இன்று வெளியிட்ட பதிவு பின்வருமாறு,
`என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்’ என்றார்.