தமிழ்நாடு

விஜயின் திமுக சார்ந்த அரசியல் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும்: அண்ணாமலை

புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி விருப்ப மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முந்தைய இரு கல்விக் கொள்கைகளிலும் ஹிந்தி கட்டாய மொழியாக இருந்தது

ராம் அப்பண்ணசாமி

நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில் அவர் பேசியவை:

`நீட் தேர்வுக்கு ஆதாரத்தின் அடிப்படையில் நாங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறோம். நீட் தேர்வு தொடர்பான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். நீட் தேர்வுக்கு முன்பு எத்தனை மாணவர்கள் அரசுக் கல்லூரிக்கும், தனியார் கல்லூரிக்கும் தேர்வானார்கள், நீட் தேர்வுக்குப் பின்பு எத்தனை மாணவர்கள் அரசுக் கல்லூரிக்கும், தனியார் கல்லூரிக்கும் தேர்வானார்கள் என்று வெளியிட்டால் பிரச்சனை முடிந்துவிடும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.

அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் சொந்த கருத்தைப் பேசும்போது அறிவியல் தரவுகளை முன்வைத்துப் பேச வேண்டும். திமுக சார்ந்த அரசியலை விஜய் கையிலெடுத்தால் வரவேற்கிறேன். விஜயின் திமுக சார்ந்த அரசியல் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும்.

ஒர் அரசியல் கட்சித் தலைவராக விஜயின் கருத்துகளை வரவேற்கிறேன். ஏனென்றால் எங்களின் அரசியலுக்கும், கட்சி வளர்ச்சிக்கும் அது நல்லது. ஆனால் ஒரு சாதாரண மனிதனாக அதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஆதாரப்பூர்வமான அறிவியல் தரவுகளை முன்வைத்து அவர்கள் பேசினார் அது சிறப்பாக இருக்கும்.

2020-ல் வெளியான புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி விருப்ப மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முந்தைய இரு கல்விக் கொள்கைகளிலும் ஹிந்தி கட்டாய மொழியாக இருந்தது. அதாவது 2020 வரைக்கும் இந்தியாவில் ஹிந்தி கட்டாய மொழியாக இருந்தது. இதை திமுகவினர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

பிரதமர் மோடி விஸ்வகர்மா யோஜனா என்ற ஒன்றைக் கொண்டு வந்தால் அதை குலக்கல்வித் திட்டம் என்கின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையில், மீனவர் சமுதாயம் வாழும் கடலோரப் பகுதிகளில் அந்த மக்களுக்கு படகுகள், கடல்கள் குறித்த பயிற்சி வழங்கப்படும். இது குலக்கல்வி இல்லையா’ என்றார்.