அன்னபூர்ணா சீனிவாசன் வருத்தம் தெரிவிக்கும் காணொளி தொடர்பான சர்ச்சை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன். அவர் பேசியவை பின்வருமாறு:
`கோவை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் சீனிவாசன் நீண்ட அனுபவம் கொண்டவர். அவர் சமூதாயத்தின் உயர்ந்த நிலையில் இருப்பவர், எனக்கு சகோதரரைப் போன்றவர். அந்தக் கூட்டத்தில் காரம், இனிப்பு போன்றவற்றுக்கான ஜிஎஸ்டியில் வித்தியாசங்கள் இருக்கின்றன என்று அவர் பேசினார்.
அந்தக் கூட்டத்தில், நான் ஜிலேபி சாப்பிட்டேன், சண்டைபோட்டேன் என்று அவர் பேசியிருந்தார். நான் உடனே அவரிடம், நான் உங்கள் கடைக்கு எத்தனை முறை வந்திருக்கிறேன். எப்போதாவது உங்களிடம் சண்டை போட்டிருக்கிறேனா, நான் எத்தனைமுறை ஜிலேபி சாப்பிட்டுள்ளேன், நான் அங்கு ஜிலேபி சாப்பிட்டதே இல்லை என்று மேடையிலேயே கேட்டிருக்க முடியும்.
ஆனால் நான் கேட்கவில்லை ஏனென்றால் அது ஒரு பொதுமேடை. அதன்பிறகு அது குறித்து நான் பேசவேயில்லை. அடுத்த நாள், அதாவது நேற்று காலை 7 மணியில் இருந்து தொடர்ச்சியாக எனக்கு அவர் கைபேசியில் அழைத்தார். நான் தவறாகப் பேசிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள், அமைச்சரைச் சந்தித்து நான் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றார்.
இதை அடுத்து மதியம் 2.30 மணி அளவில் அவர் ஹோட்டலுக்கு வந்து எங்களைச் சந்தித்து, நான் பேசிய விஷயங்கள் தவறானது. நான் உங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன். நான் பேசியவை சமூக வலைதளங்களில் வேறு மாதிரியான கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. உங்கள் மனது புண்பட்டிருந்தால் அதற்கு நான் மன்னிப்புக்கேட்டுகொள்கிறேன் என்றார்.
மேலும் நான் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவன் என்றும் அவர் விளக்கினார். அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி குறித்து நீங்கள் எந்த கருத்து தெரிவிக்கவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது, அதற்கு பதில் தெரிவிக்கவும் எனக்குக் கடமை இருக்கிறது என்று பதிலளித்த நிதியமைச்சர், ஒரு எம்.எல்.ஏ. அதுவும் பெண் வாடிக்கையாளர் என்னென்ன சாபபிட்டார் என்பதைப் பொதுவெளியில் கூறலாமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் ஏதோ அந்த நேரத்தில் தெரியாமல் பேசிவிட்டேன் என்று கூறி என்னிடம் மன்னிப்பு கேட்டார்’ என்றார்.