மனவருத்தம் இருந்தால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்தநாள் மற்றும் 63-வது குருபூஜையை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணைந்து கடந்த வாரம் பசும்பொன் சென்றிருந்தார் அதிமுக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன். இதைத் தொடர்ந்து அவரைக் கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து வருவதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்நிலையில், மனவருத்தம் இருந்தால் அதைப் பொதுச்செயலாளரிடம் தெரிவிக்க வேண்டும், தன்னுடைய ஈகோவை காட்ட இது நேரமல்ல என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"நான் மாவட்டச் செயலாளர். எனக்குக் கீழ் தலைவர், துணைச் செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் இருக்கிறார்கள். நான் சொல்வதுபடி செயல்பட்டால் தான் சரியாக வரும். நான் சொல்லும் கருத்தை எடுத்துச் சென்றால் தான் மாவட்ட நிர்வாகம் சிறப்பாகக் கட்சி நடத்த முடியும்.
அதுபோல ஒரு மாபெரும் இயக்கத்தில் அவரைப் பொதுச்செயலாளர் ஆக்குவதற்கு எல்லோரும் தான் பாடுபட்டார்கள். ஒற்றைத் தலைமை வேண்டும், பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என செங்கோட்டையன் தான் சொன்னார். இன்று மட்டும் என்ன ஆகிவிட்டது?
இந்தக் கட்சிக்கு எது நல்லதோ அதைப் பொதுச்செயலாளர் செய்கிறார். அவர் தலைமையில் நாம் பயணிக்கும்போது, இந்த நேரத்தில் நமக்கு யார் எதிரி? திமுக எதிரி. திமுகவுக்கும் நமக்கும் நிலத் தகராறு கிடையாது. மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் திமுக, எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பணிகளைச் செய்யாமல் வாரிசு அரசியலை முன்னெடுப்பார்கள். மற்றொன்று பெருத்த ஊழல் நடக்கும். ஊழல் நடக்கிறது என்பதை நாள்தோறும் பத்திரிகைகளில் செய்தி வெளியிடுகிறீர்கள். நிர்வாகம் மோசமாக இருப்பதாகச் செய்தி வெளியிடுகிறீர்கள்.
இந்த நோக்கத்தில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மக்களும் நினைக்கும்போது, நமக்கு இருக்கும் ஒரே பார்வை, திமுகவை எதிர்க்க வேண்டும் என்பது தான். அந்தப் பார்வையில் வந்தால் பரவாயில்லை. இந்த நேரத்தில் தன்னுடைய ஈகோவை பயன்படுத்த வேண்டும் என நினைப்பது தவறு. அதற்காக அவர் (பொதுச்செயலாளர்) நடவடிக்கை எடுக்கிறார். ஒருங்கிணைப்பு என்றாலே அவருக்குப் பிடிக்காது என்றிலல்லை. இந்தக் கட்சிக்கு நன்மை செய்பவர்களை வைத்துக்கொண்டு கட்சி நடத்துகிறார். இது தான் தலைமையின் பண்பு.
தலைமை என்று உருவாக்கிவிட்டால், தலைமை சொல்வதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தலைமையைக் கேட்காமல் செய்யக் கூடாது. ஊடகங்கள் மூலமாக தனிப்பட்ட கருத்தைச் சொல்லக் கூடாது.
எனக்குக் கூட மனவருத்தம் இருக்கும். எனக்கே பல வருத்தம் இருக்கும். அதை ஊடகத்திடம் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா? பொதுச்செயலாளரைப் பார்த்து முறையிட்டு முறையாகச் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லையெனில் அமைதியாக இருந்துகொண்டு, எப்போது சொல்கிறாரோ அப்போது கேட்க வேண்டும். அதைத் தான் செய்ய வேண்டுமே தவிர, கட்சிக்கு விரோதமாக பாதகமாக யார் எதைச் செய்தாலும் பொதுச்செயலாளர் நடவடிக்கை எடுத்தால் ஒவ்வொரு அதிமுக தொண்டரும் வரவேற்கத்தான் செய்வார்கள், அதுபோல நிர்வாகிகளும் வரவேற்கத்தான் செய்கிறோம்.
எனக்கு மனவருத்தம் உள்ளது என்பதை ஓர் உதாரணத்துக்காகப் பொதுவாகச் சொன்னேன். என்னைச் சொல்லவில்லை. எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. பொதுச்செயலாளர் என்னை நன்றாகத்தான் வைத்திருக்கிறார்" என்றார் செல்லூர் ராஜூ.
Sellur Raju | AIADMK | ADMK | Edappadi Palaniswami | Sengottaiyan |