ANI
தமிழ்நாடு

பெரியார் குறித்து விஜய் கூறியதை நான் ஏற்கவில்லை: சீமான்

அவர்தான் சாதியை ஒழித்ததாக தம்பி நினைத்துக்கொண்டிருக்கிறார்.

ராம் அப்பண்ணசாமி

தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி நடப்பதாக யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி குறித்து தவெக தலைவர் விஜய் தெரிவித்த கருத்துக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்வினையாற்றியுள்ளார்.

மதுரையில், நியூஸ் 18 செய்தி ஊடகத்திற்கு சீமான் நேற்று (மே 30) பேட்டியளித்தார்.

(செய்தியாளர் எழுப்பிய கேள்வி) சாதிக்கு தூரமாக இருங்கள்; சாதியைத் தள்ளி வையுங்கள். தீண்டாமைக்கு எதிராகப் பேசிய பெரியாருக்கே சாதிச் சாயம் பூசப்படுகிறது என்று (விஜய்) கூறியது குறித்து..

(சீமான் பதில்)`பெரியாருக்கே என்பதை நான் ஏற்கவில்லை. பெரியாரின் சாதி உணர்வு, சாதி வெறி குறித்து நாங்கள் சொன்னால் உங்களால் பதில் சொல்ல முடியுமா? அவரே சாதி சாயம் பூசிக்கொண்டவர்தான். முகமது அலி ஜின்னாவுக்கு (அவர்) எழுதிய கடிதம் குறித்து எதுவும் சொல்லவில்லையே.

ஆந்திரத்தில் ராமசாமி நாயக்கர் என்றுதான் படம் வெளியானது. அதை யார் வெளியிட்டது? தயாரித்தது இவர்கள்தானே, பிறகு எதற்கு அவ்வாறு வெளியிடப்பட்டது? அவர்தான் சாதியை ஒழித்ததாக தம்பி நினைத்துக்கொண்டிருக்கிறார்.

எங்கள் முன்னோர்களில் சாதியை யார் வளர்த்தது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பாடியது யார்? பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ என்று பாடிய சிவவாக்கியார் யார்? எத்தனை முறை இதை சொல்வது?

சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பெரியார் பாடினாரா? 1921-ல் பாட்டன் பாரதியார் மறைந்தார், 1936-ல்தான் இவர் (பெரியார்) பேசவே தொடங்கினார். அவர் பாடாத சாதி ஒழிப்பா? வேதியர் ஆயினும் ஒன்றே வேறு குலத்தவராயினும் ஒன்றே என்று பாடியது பாரதியார்.

கனகலிங்கம் என்பவனை அழைத்து அவனுக்குப் பூணுலை அணிவித்து, நீ பறையன் அல்ல, அய்யன் என்று சொல்லி உலகத்திலேயே சாதி மாற்றிய ஒரே மகான் எங்கள் பாட்டன் பாரதி. அப்படி ஏதாவது செய்தி இருக்கிறதா?’ என்றார்.