என்னை அதானி சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை, அதானி விவகாரத்தை அரசியலாக்கி வருவதால் இந்த விளக்கத்தை அளிப்பதாக இன்று (டிச.10) தமிழக சட்டப்பேரவையில் பேசியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
பாமக எம்.எல்.ஏ. ஜி.கே. மணி அதானி விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு,
`உறுப்பினர் ஜி.கே. மணி மட்டுமல்லாமல் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் பொதுவெளியிலும் இது குறித்து தொடர்ந்து பேசிவருகின்றனர். அதானியுடன் முதல்வருக்குத் தொடர்பு உள்ளது, முதல்வரை அதானி சந்தித்தார் என பேசுகின்றனர். தமிழ்நாட்டில் அதானி குழுமம் மேற்கொண்ட தொழில் முதலீடுகள் குறித்து பொதுவெளியில் வரும் தவறான புகார்களுக்கு எரிசக்தித் துறை செந்தில் பாலாஜி தெளிவான விளக்கத்தை 2-3 முறை அளித்திருக்கிறார்.
அதற்குப் பிறகும் தொடர்ந்து இது குறித்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதானி நிறுவனத்தின் முதலீடுகளை வைத்து தமிழக அரசு மீது களங்கம் கற்பிக்க நினைப்பவர்களுக்கு நான் கேள்வி ஒன்றை எழுப்ப விரும்புகிறேன்.
அதானி மீது கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும். அந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும் என இண்டியா கூட்டணிக் கட்சிகள் கோரிக்கைவிடுத்து வருகின்றன. திமுக மீது குறை கூறும் பாஜகவோ பாமகவோ இந்தக் கோரிக்கையை ஆதரிக்க தயாராக இருக்கிறதா?
என்னை அவர் சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை. ஏற்கனவே நான் பலமுறை தெளிவுபடுத்திவிட்டேன், நான் அதானியை சந்திக்கவில்லை. அதானி விவகாரத்தை அரசியலாக்கி வருவதால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். இதுவரை நான் பொறுமையாகவே இருந்தேன்.
சம்மந்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கான விளக்கத்தை வழங்கினார். இன்றைக்கு அவர் அவையில் இல்லை, எனவே நாம் விளக்கமளிக்கிறேன்' என்றார்.
இதனை தொடர்ந்து அதானி விவகாரத்தில் முதல்வரின் விளக்கத்தை ஏற்கவில்லை எனக் கூறி பாமக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.