படம்: https://x.com/duraivaikooffl
தமிழ்நாடு

நலமுடன் இருக்கிறேன்: மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்ட வைகோ

கிழக்கு நியூஸ்

எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்று வரும் வைகோ, தான் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையிலிருந்தபடி காணொளி வெளியிட்டுள்ளார்.

மதிமுக நிர்வாகியின் மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கட்சிப் பொதுச்செயலாளர் வைகோ அண்மையில் திருநெல்வேலி சென்றிருந்தார். அப்போது தங்கியிருந்த வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில், வைகோவின் தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை அழைத்து வரப்பட்ட வைகோவுக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்தபடி, தான் நலமுடன் இருப்பதாக வைகோ காணொளியை வெளியிட்டுள்ளார்.

அந்தக் காணொளியில் அவர் பேசியதாவது:

"அன்புள்ளம் கொண்ட தமிழ்ப் பெருமக்களே! ஏறத்தாழ 7 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்திருக்கிறேன். ஆனால், கீழே விழுந்ததில்லை. தற்போது நான்கு நாள்களுக்கு முன்பு நெல்லை சென்றிருந்தபோது, நான் தங்கியிருந்த வீட்டில் படிகள் மூலம் ஏறாமல், அருகிலிருந்த திண்ணை வழியாக ஏறினேன். அப்படியே இடதுபுறமாக சாய்ந்துவிட்டேன். எனக்குத் தலை அல்லது முதுகுப் பகுதியில் அடிபட்டிருந்தால், இயங்க முடியாமல் போயிருப்பேன்.

ஆனால், தற்போது இடது தோள்பட்டையின் கிண்ணம் உடைந்திருக்கிறது. அதோடு அந்த எலும்பும் கீறியிருக்கிறது. அதனால், அங்கேயே மருத்துவர் முரளியிடம் காண்பித்தேன். அவர் உடனடியாக சென்னை சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். பிறகு, மருத்துவர் தணிகாச்சலத்திடம் ஆலோசனை கேட்டேன். அவர் எக்ஸ்ரேவை பார்த்து பயப்பட வேண்டாம், உங்களுக்கு ஓய்வு தேவை என்றார்.

நாளையே அறுவைச் சிகிச்சை நடைபெற்று, தோள்பட்டையில் விலகியிருக்கிற அந்த கிண்ணம் மீண்டும் பொருத்தப்படவுள்ளது. இதோடு சேர்ந்து எலும்பும் இரு செ.மீ. உடைந்திருக்கிறது. இவ்விரண்டுக்கும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள அப்போலோ மருத்துவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆகவே, நான் நன்றாக இருக்கிறேன். முழு ஆரோக்கியத்துடன் வருவேன். முன்புபோல இயங்க முடியுமா என்று யாரும் சந்தேகிக்க வேண்டாம். நான் உழைப்பு என்பதற்கு இலக்கணமாக இருக்கக் கூடியவன் என்பதை கலைஞர் சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு மேலும் செய்ய வேண்டிய சேவைகளை செய்யக் காத்திருக்கிற வைகோ, முழு நலத்தோடு பரிபூரண ஆரோக்கியத்தோடு வருவேன் என்பதை நம் தோழர்கள், பொதுவாழ்வில் அக்கறை உடையவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்காக கவலைப்படுகிற உள்ளங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார் வைகோ.