கோப்புப்படம் 
தமிழ்நாடு

சுயநலவாதிகளால் சரிவைச் சந்திக்கும் அதிமுக: சசிகலா

விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்திருப்பது தவறான முடிவு - சசிகலா.

கிழக்கு நியூஸ்

தனது வருகை தற்போது ஆரம்பித்துள்ளதால், அதிமுகவுக்கு முடிவுகாலம் வந்துவிட்டதாக யாரும் கூற முடியாது என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து சசிகலா இன்று ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, தனது வருகை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

"இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி அதிமுக. ஆனால், இன்று அதிமுக தொடர்ந்து சரிவுகளைச் சந்தித்து வருகிறது. இதற்கு என்ன காரணமென்றால், ஒரு சில சுயநலவாதிகள் அதிமுகவை இந்தளவுக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். இது எல்லாவற்றையும் நானும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எம்ஜிஆர் அனைவரையும் ஒன்றாக இணைத்துச் செல்ல வேண்டும் என அடிக்கடி சொல்வார். நானும், இப்படியே பழக்கப்பட்டு வந்துவிட்டேன். ஜெயலலிதாவும் இப்படிதான் இருந்தார்.

ஜெயலலிதா சாதி பார்ப்பவர் அல்ல. அதிமுகவில் சாதி அரசியலும் கிடையாது, வாரிசு அரசியலும் கிடையாது. ஆனால், தற்போது அதிமுகவில் சாதி அரசியலுக்குள் நுழைகிறார்கள்.

நான் சாதி பார்ப்பவராக இருந்திருந்தால், பெங்களூரு செல்லும்போது எதற்காக அவரிடம் (எடப்பாடி பழனிசாமி) முதல்வர் பதவியை ஒப்படைத்திருப்பேன். நமக்கு மேற்கு மாவட்டத்திலிருந்து தலைவர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அனைவருக்கும் ஒரு வாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இன்று அதிமுக மூன்றாவது, நான்காவது இடத்துக்குச் செல்கிறது. டெபாசிட்டை இழந்துள்ளது. தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்கக் கூடாது என்பதுதான் என்னுடையக் கோரிக்கையாக உள்ளது. தற்போது நல்ல நேரம் வந்துள்ளது. நம்முடைய நேரம் சரியாகக் கனிந்து வந்துள்ளது. எனவே, எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது.

நம்மைப் பொறுத்தவரை நான் மிகவும் வலிமையாக இருக்கிறேன். அதிமுக முடிந்துபோனது என யாராலும் நினைக்க முடியாது. காரணம், என்னுடைய வருகை தற்போது ஆரம்பித்துள்ளது.

2026-ல் நிச்சயமாக ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம். அதுவும் தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைப்போம். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்" என்றார் சசிகலா.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த கேள்விகளுக்கு சசிகலா பதிலளித்ததாவது:

"விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்திருக்கக் கூடாது. தற்போதைய சூழலில் இதைப் புறக்கணித்திருப்பது சரியானது அல்ல. போட்டியிடவில்லை என்று அறிவித்திருப்பது தவறு" என்றார்.