தமிழ்நாடு

சென்னை மருத்துவமனையிலும் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்: எம்.பி. சசிகாந்த் | MP Sasikanth |

மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சசிகாந்த் அனுப்பி வைக்கப்பட்டார்.

கிழக்கு நியூஸ்

மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வித் தொகையை மத்திய அரசு வழங்காததைக் கண்டித்து, திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில், திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகாந்த் செந்தில், பாஜக அரசு தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய ரூ. 2,152 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. அதைக் க்ண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளேன். கல்வி நிதியை நிறுத்தி வைத்ததால் 43 லட்சம் மாணவர்கள், 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.

அவருடைய இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினரும் நேரில் வந்து உரையாடிவிட்டுச் சென்றார்கள். ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக அழைத்துப் பேசி தனது ஆதரவைத் தெரிவித்தார்.

எனினும் சனி இரவு அவருக்குத் திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்தது. இதனால் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சசிகாந்த் அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் கருதி உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். எனினும் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து தன்னுடைய போராட்டத்தைத் தொடர்ந்தார்.

இந்நிலையில் உடல்நலம் மேலும் பாதிக்கப்படும் என்பதால் மேல்சிகிச்சைக்காக இன்று மதியம் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சசிகாந்த் அனுப்பி வைக்கப்பட்டார்.

எனது உண்ணாவிரதப் போராட்டம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்கிறது என்று எக்ஸ் தளத்தில் சசிகாந்த் தெரிவித்துள்ளார்.