தமிழ்நாடு

குரூப் 4 தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?: பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பா?

கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கூடுதலாக 2,688 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டன.

ராம் அப்பண்ணசாமி

கடந்த ஜூன் 9-ல் நடந்த குரூப் 4 தேர்வு முடிவுகளை இன்று (அக்.28) பிற்பகல் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 காலிப் பணியிடங்கள் மீண்டும் உயர்த்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், ஆய்வக உதவியாளர், வரித்தண்டலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆவின் ஆய்வக உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், பால் அளவையாளர், வனக் காவலர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர், தனிச் செயலர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு தமிழக அரசுத் துறைகளில் உள்ள 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ல் டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்பட்டது.

ஜூன் 9-ல் நடந்த தேர்வை 7,247 தேர்வு மையங்களில் சுமார் 15.88 லட்சம் தேர்வர்கள் எழுதியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, கடந்த செப்.11-ல் கூடுதலாக 480 காலிப்பணியிடங்களும், அக்.9-ல் மீண்டும் 2,208 காலிப்பணியிடங்களும் சேர்க்கப்பட்டு, மொத்தமுள்ள குரூப் 4 காலிப்பணியிடங்கள் 8,932 ஆக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி.யால் இன்று வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளை www.tnpscexams.in மற்றும் www.tnpscresults.tn.gov.in ஆகிய இணையதளங்களின் வழியாக அறிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது உள்ள குரூப் 4 காலிப்பணியிடங்களில் மேலும் 559 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.