தமிழ்நாடு

தமிழகத்திற்கு கூடுதலாக எத்தனை மருத்துவப் படிப்புக்கான இடங்கள்?: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இன்னமும் 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத நிலை உள்ளது.

ராம் அப்பண்ணசாமி

தமிழகத்திற்கு 150 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கூடுதலாக கிடைக்கவுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளார் தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

தில்லியில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் மா. சுப்பிரமணியன், அதன்பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

`மத்திய சுகாதார அமைச்சரை இன்று சந்தித்துப் பேசினோம். 11 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினோம். அந்த 11 கோரிக்கைகள் தொடர்பாக தனித்தனியாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அந்த வகையில் தற்போது 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் தற்போது தமிழகத்தில் இருக்கின்றன. இன்னமும் 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத நிலை உள்ளது.

இது தொடர்பாக கடிதங்கள் வாயிலாகவும், நேரடி சந்திப்புகளின்போதும் மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துவந்தார். இந்த முறையும் அதை வலியுறுத்தியுள்ளோம். மயிலாடுதுறை, தென்காசி, காஞ்சிபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடர்பாக விரைந்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதியளித்தார். அதுபோல நாமக்கல், திருப்பூர், விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரிகளில் 150 மாணவர்கள் படிப்பதற்குரிய கட்டமைப்பும், பேராசிரியர்கள் பணியிடங்களும், உபகரணங்களும் இருக்கும் நிலையில் 100 இடங்களுக்கான அனுமதி மட்டுமே உள்ளது.

இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 50 இடங்களை கூடுதலாக ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டிருக்கிறோம். உடனடியாக அதை செய்து தருவதாக வாக்களித்துள்ளார். இதனால் இந்த 3 கல்லூரிகளிலும் உள்ள 100 இடங்கள் 150 இடங்களாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு 150 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கிடைக்கவுள்ளது’ என்றார்.