சென்னை உயர் நீதிமன்றம்  
தமிழ்நாடு

உடல் பருமன் சிகிச்சையில் உயிரிழந்த இளைஞர்: மருத்துவமனை உரிமம் ரத்து செல்லாது

யோகேஷ் குமார்

உடல் எடையை குறைக்க வேண்டுமென அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்பவர் உடல் பருமன் காரணமாக, சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்கச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை தொடங்கிய 10 நிமிடங்களில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஹேமசந்திரனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், இரண்டு இணை இயக்குநர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து இரண்டு நாள்களில் விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுருந்தார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவில் இல்லை எனவும், மேலும் தகுதியான மருத்துவர்கள் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட மருத்துவத் துறை உத்தரவிட்டுருந்தது.

இதைத் தொடர்ந்து மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்திருந்த நிலையில், அதை எதிர்த்து மருத்துவமனை வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மருத்துவமனையிடம் உரிய விளக்கம் கேட்காமல் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும், சிகிச்சை பெற்ற இளைஞரிடம் முன் அனுமதி பெற்ற பிறகே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது எனவும் கூறி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விளக்கம் அளித்துள்ளார். மேலும், அந்த மருத்துவமனை பல ஆண்டுகளாக சிறப்பாகக் செயல்பட்டு வருவதாகவும், அங்கு போதுமான வசதிகள் இருப்பதாகக் கூறி மருத்துவமனையின் உரிமம் ரத்து செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.