தமிழ்நாடு

தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் மாற்றம்

ராம் அப்பண்ணசாமி

தமிழகத்தின் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிடங்களை மாற்றி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழக உள்துறை செயலாளராகப் பதவி வகித்து வந்த அமுதா ஐஏஎஸ் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் அமுதா ஐஏஎஸ்.

சென்னை மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பில் உள்ள ஜெ. ராதாகிருஷ்ணன் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக ஜெ. குமரகுருபரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக மதுமதி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்புக்கு முன்பு சிட்கோ அமைப்பின் மேலாண் இயக்குனராகப் பதவி வகித்தார் மதுமதி.

தொழில்நுட்பக் கல்வி ஆணையராக உள்ள வீர ராகவ ராவ், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குமார் ஜெயந்த் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அழகு மீனா கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும், சிம்ரஞ்சித் சிங் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும், கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராகவும், ஆதித்யா செந்தில் குமார் கடலூர் மாவட்ட ஆட்சியராகவும், ரத்தினசாமி அரியலூர் மாவட்ட ஆட்சியராகவும், அருணா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும், ஆகாஷ் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.