அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து நேற்று (ஆக. 20) பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆக. 21) திரும்பப் பெற்றுள்ளது.
கடந்த 2022 ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையும், பொதுக்குழு தீர்மானங்களையும் எதிர்த்து திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி பி.பி. பாலாஜி, உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (ஆக. 21) மீண்டும் நடைபெற்றது.
தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என சூரியமூர்த்தி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதை மறைத்து தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன் நீதிபதி பி.பி. பாலாஜி முன்பு வாதங்களை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்த நீதிபதி பாலாஜி, வழக்கின் மறுவிசாரணையை ஆகஸ்ட் 25-க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.