வங்கக்கடலில் வலுவடைந்துள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (டிச.12) கனமழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி. இது கடந்த டிச.10-ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, நேற்று தொடங்கி தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, அதாவது தமிழகத்தின் கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் நேற்று (டிச.11) இரவு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை தொடங்கி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.
மேலும் இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் கனமழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் தேனி, மதுரை திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழக உள் மாவாட்டங்களிலும் மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல்பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.