கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 119 மி.மீ. மழைப் பொழிவு பதிவானதாக தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்குப் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதைச் சமாளிக்க இந்த அரசு தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், நேற்று பெய்த மழையால் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்றும் அவர் கூறினார்.