திருச்செந்தூர் கோயிலில் நாளை (ஜூலை 7) குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், பிரபல தொழிலதிபர் ஷிவ் நாடார் ரூ. 206 கோடிக்கு நன்கொடை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2009-க்கு பிறகு முதன்முறையாக திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெறுகிறது. திங்கள்கிழமை காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது. இதற்காக 8,000 சதுர அடி பரப்பளவில் 76 குண்டங்களுடன் பிரமாண்டமான வேள்விச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு பலர் நன்கொடை கொடுத்துள்ளார்கள். ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் ரூ. 206 கோடி அளவுக்கு நன்கொடை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022-ல் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் கோயில் புனரமைப்புப் பணிகளுக்காக ரூ. 300 கோடி அளவுக்குத் திட்டம் வகுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் தான் ரூ. 206 கோடிக்கான பொறுப்பை ஷிவ் நாடார் ஏற்றிருக்கிறார். ஷிவ் நாடாரின் தாயார் வாமாசுந்தரி பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, அந்த அறக்கட்டளை சார்பில் திருச்செந்தூர் கோயிலுக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஷிவ் நாடார் நன்கொடை வழங்கியதுகூட வெளியில் பெரிதளவில் தெரியாமல் உள்ளது. ஷிவ் நாடார் பூர்விகம் திருச்செந்தூர். இவர் திருச்செந்தூர் கோயிலுக்கு மட்டுமின்றி நெல்லையப்பர் கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தனது தாயார் பெயரிலுள்ள அறக்கட்டளை மூலம் நன்கொடைகள் வழங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.