தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி | TVK |

தவெக தரப்பு வாதங்களுக்குப் பதிலளிக்க முடியாமல் அரசு தரப்பு திணறியது என்று வழக்கறிஞர் அறிவழகன் பேச்சு...

கிழக்கு நியூஸ்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் குறித்து தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் மத்திய மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் சார்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது தவெக தரப்பில், "ஆனந்த், நிர்மல் குமார் இருவர் மட்டும் கூட்டத்தை நிர்வகிக்க முடியாது. எங்களுக்கு 3 மணி முதல் 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. விஜய் 6 மணிக்கு நிகழ்விடத்திற்கு வந்தார். அதற்குள் கூடிய கூட்டத்தை யாரும் குறை சொல்ல முடியாது. காவல்துறை, விஜயிக்கும் மக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அங்கு காவலர்களே இல்லை. நாங்கள் அவர்களை குறைசொல்லவில்லை குற்றம் சாட்டுகிறோம். காவல் சட்டத்தின்படி, கூட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பு யாருடையது என்று பாருங்கள். முழுப் பொறுப்பும் அரசின் மீதுதான். தொண்டர்களைக் கொல்ல வேண்டுமென்ற எண்ணம் இல்லை. இது திட்டமிட்ட செயல் அல்ல. காலணி மற்றும் சில ரசாயனங்களைக் கூட்டத்தில் இருந்த சிலர் வீசி எறிந்தனர். கரூரில் ஒட்டுமொத்த மக்களும் கூடிய நிலையில் காவல்துறை தடியடி நடத்தியுள்ளது கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கோருவது எதனால்? உரிய பாதுகாப்பை வழங்கவே; கூட்டங்களை மேலாண்மை செய்யும் பொறுப்பு முழுக்க முழுக்க அரசுக்கே உள்ளது. மக்கள் அதிகமாக வருவர் என போலீஸ் கணித்திருக்க வேண்டும்; நாங்கள் அதில் புலமை பெற்றவர்கள் அல்ல. வேலுச்சாமிபுரம் குறுகிய சாலை எனில் போலீசார் அனுமதி மறுத்திருக்கலாமே?; வேலுச்சாமிபுரத்தை பற்றி எங்களுக்கு தெரியவில்லை. 4 மணி நேரம் விஜய் தாமதமாக வந்தார். 3 மணிக்கு வருவதாக சொன்னவர், 7 மணிக்கு வந்தது கிரிமினல் குற்றமா? மொத்த வழக்கும் அரசுத்தரப்பால் திரிக்கப்பட்டுள்ளது. சொந்தக் கட்சியினரைக் கொல்லும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு விபத்தை கொலையாக மாற்ற முடியாது” என்று வாதங்கள் முன் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு அரசுத் தரப்பில், “ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தவெக தரப்பினர் வைக்கிறார்கள். இவை பொறுப்பற்ற வாதங்கள். கரூரில் சம்பவம் நடந்தவுடன் தவெகவினர் தப்பி ஓடிவிட்டனர். காத்திருந்தவர்களுக்கு தவெக சார்பில் குடிநீர் வழங்கப்படவில்லை. பெரும்பாலானவர்கள் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிராமன், வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார். பின்னர் மாலையில் நடந்த விசாரணையில் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக தரப்பு வழக்கறிஞர் அறிவழகன், ”எங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கும்போது அரசு தரப்பில் திணறினார்கள். காவல்துறை தரப்பில் தவெக பொதுச்செயலாளரை இப்போது கைது செய்வதற்கான முகாந்திரம் இல்லை. விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விடுமுறை காலத்திற்குப் பிறகு தீர்ப்பு வழங்குவார்கள்” என்று கூறினார்.