ANI
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடை: உயர் நீதிமன்ற மதுரை கிளை | Thiruparankundram |

இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதை அடுத்து மூன்றாவது நீதிபதி உத்தரவு...

கிழக்கு நியூஸ்

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழியைப் பலி கொடுக்கத் தடை விதித்த உத்தரவை உறுதி செய்து மூன்றாவது நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் முதலாம் படைவீடாகக் கருதப்படுகிறது. இதே மலையில் மதுரை சுல்தான்களின் இறுதி மன்னரான சிக்கந்தர் ஷா வீர மரணம் அடைந்தததால், அவர் நினைவாக சிக்கந்தர் தர்காவும் உள்ளது.

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஆடு, கோழியைப் பலி கொடுக்கத் தடை விதிக்கப்பட வேண்டும், நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து அமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல், சிக்கந்தர் மலையில் வழக்கம்போல் நடக்கும் வழிபாட்டு உரிமைகளைத் தடுக்கக் கூடாது என்று இஸ்லாமிய அமைப்புகளும் மனுத்தாக்கல் செய்தன.

இந்த இரு வழக்குகளும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 24 அன்று, இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.

திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி நிஷா பானு, நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர் தொழுகை நடத்த தடையில்லை என்றும் கூறி, மனுக்களைத் தள்ளுபடி செய்தார். ஆனால், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டார்.

இதனால், இவ்வழக்கு மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது நீதிபதி இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். திருப்பரங்குன்ற மலையில் ஆடு, கோழியைப் பலியிட தடை விதித்த நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பை உறுதிப்படுத்தினார். மேலும், நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடையில்லை என்ற நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதி செய்து, வழக்கை முடித்து வைத்தார்.