முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ. 36 கோடி வருமான வரியை செலுத்தக் கூறிய நோட்டீஸை எதிர்த்து ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் ரூ.36 கோடிக்கு வருமான வரி பாக்கி வைத்திருந்தார். அவர் இறந்த பின்னர், இந்த தொகையை செலுத்தும்படி அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். முன்னதாக இதை விசாரித்த உயர் நீதிமன்றம், வருமான வரித்துறையின் நோட்டீஸுக்குத் தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று (செப்.19) நீதிபதி சரவணன் முன் நடைபெற்றது. அப்போது, ஜெயலலிதாவின் வருமான வரித் தொகை 36 கோடி ரூபாயில் இருந்து 13 கோடி ரூபாயாக குறைத்து, திருத்தி அமைக்கப்பட்ட நோட்டீஸ் ஜெ.தீபாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, ரூ.36 கோடி செலுத்தும்படி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை திரும்ப பெற்று விட்டதால், அதை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், ரூ.13 கோடி கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தீபா சட்டப்படியாக நிவாரணத்தை கோர உரிமை உள்ளது என்றும் உத்தரவிட்டார்.