தமிழ்நாடு

ஹெச். ராஜா குற்றவாளி: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கி, தீர்ப்பு நிறுத்திவைப்பு.

ராம் அப்பண்ணசாமி

இரு வழக்குகளில் ஹெச். ராஜாவை குற்றவாளியாக அறிவித்துத் தீர்ப்பளித்துள்ளது எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம்.

கடந்த 2018 மார்ச்சில் பெரியார் சிலையை உடைப்பேன் என தன் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டிருந்தார் ஹெச். ராஜா. இதைத் தொடர்ந்து 2018 ஏப்ரலில் திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் செய்து தன் டிவிட்டர் கணக்கில் அவர் கருத்து பதிவிட்டிருந்தார். இந்த இரு விவகாரங்கள் தொடர்பாக ஹெச். ராஜா மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஹெச். ராஜா முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால், அவர் மீது தொடரப்பட்ட இந்த இரு வழக்குகளையும் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் தனித்தனியாக விசாரித்தார்.

இந்நிலையில், பெரியார் சிலை உடைப்பு கருத்து வழக்கிலும், கனிமொழி மீதான விமர்சன வழக்கிலும் ஹெச். ராஜாவுக்கு தனித்தனியாக 6 மாதங்கள் சிறை தண்டனையும், தலா ரூ. 2000 மற்றும் ரூ. 3000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த இரு தீர்ப்புகளுக்கு எதிராகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால், தண்டனைகளை நிறுத்திவைக்குமாறு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார் ஹெச். ராஜா தரப்பு வழக்கறிஞர். இதனை அடுத்து, கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தண்டனையை நிறுத்திவைப்பதாக அறிவித்தார் நீதிபதி ஜெயவேல்.