தவெகவின் கொள்கை எதிரி பாஜக என்று விஜய் பேசியதைக் கண்டித்து பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா எக்ஸ் தளப் பக்கத்தில் விமர்சனப் பதிவு வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், தங்களுடைய கொள்கை எதிரி பாஜக என்பதை மீண்டுமொரு முறை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், கொள்கை எதிரி என்று பாஜகவைக் குறிப்பிட்டதைக் கண்டிக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விஜயை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
"பாஜக தான் எங்களுக்கு கொள்கை எதிரி என்கிறார் தவெக தலைவர் நடிகர் ஜோஸப் விஜய் அவர்கள்...
பாஜகவின் ஆட்சி நிர்வாகக் கொள்கை என்பது அந்த்யோதயா அதாவது கடையணையும் கடைத்தேற்றல் எளிதில் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது..!!
அதனால் தான் வீடில்லாத ஏழைகளுக்கு வீடு, கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை, கண்ணீரில் இருந்தும் காசநோயில் இருந்தும் தாய்மார்களுக்கு விடுதலை அளிக்க புகையில்லா சமையலறை என்கிற முழக்கத்தோடு விளிம்பு நிலை மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, தாய் - சேய் நலன் காக்க கருவுற்ற தாய்மார்களுக்கு இலவச தடுப்பூசி, அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் தரமான உணவுப் பொருள்கள், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி, அனைத்து வீடுகளுக்கும் தரமான குடிநீர் வழங்க ஜல் ஜீவன் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000/- கெளரவ நிதி, பயிர் பாதுகாப்பீட்டுத் திட்டம், அனைவரும் தொழில் தொடங்க முத்ரா வங்கி கடன் திட்டம், அனைவருக்கும் வங்கிக் கணக்கு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் என எண்ணற்ற பல திட்டங்களை பாஜக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என மெர்சல் திரைப்படத்தில் வசனம் பேசி நடித்தார் ஜோஸப் விஜய். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களோ ஏழைகள் அனைவருக்கும் ஐந்து லட்சம் ரூபாய்க்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கி வருகிறார்.
ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று திரைப்படத்தில் வசனம் பேசிய ஜோஸப் விஜய் அவர்கள் தனது ஒவ்வொரு திரைப்படத்தின் முதல் நாளும் திரையரங்க டிக்கெட் விலை 1,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதை அமைதியாக வேடிக்கை பார்க்கிறார். அதுவும் தனது ரசிகர்களிடம் இருந்து திரையரங்குகளில் ரூ.1,000 மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து என்றைக்காவது கேள்வி எழுப்பி இருக்கிறாரா?
ஜோஸப் விஜய் அவர்கள் தனது ரசிகர்கள் வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை தனது திரைப்படங்களுக்கு டிக்கெட் எடுக்கவும், கட் அவுட் வைக்கவும் செலவு செய்து கடைசி வரை கடைநிலையிலேயே தனது ரசிகர்கள் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார் என்பதையும் பாரதிய ஜனதா கட்சி உயர்ந்த கொள்கையோடு செயல்படுதால் தான் உயர்ந்த கொள்கையற்ற ஜோஸப் விஜய் அவர்கள் பாஜக தான் எனது கொள்கை எதிரி என சொல்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது" என்று ஹெச். ராஜா பதிவிட்டுள்ளார்.
ஹெச். ராஜா ஏதேனும் மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப்படலாம் என அண்மையில் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Tamilaga Vetri Kalagam | Tamizhaga Vetri Kazhagam | TVK Vijay | BJP | H Raja | H. Raja |