அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அடுத்து அதில் சம்மந்தப்பட்ட, சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.
மேலும், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் எதிரொலியாக, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு,
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை நேரத்திற்குப் பிறகு பல்கலைக்கழக வளாகத்தில் தங்க அனுமதியில்லை.
பல்கலைக்கழக வளாகத்தில் வெளிநபர்கள் நடைபயிற்சி செய்யவும், வெளி நபர்களின் வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப்படுகிறது.
மாலை, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் ரோந்து செல்லவேண்டும். பல்கலைக்கழக வளாகத்தில் வெளிநபர்கள் வாகனம் கண்டறியப்பட்டால் காவல்துறையில் புகார் அளிக்கப்படும்.
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான போஷ் (POSH) கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடி மாணவர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும்.