கோப்புப்படம் 
தமிழ்நாடு

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்துக்கு சீல்

குத்தகையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் ரூ. 870 கோடி குத்தகைத் தொகையை அரசுக்குச் செலுத்தாமல் நிலுவையில் வைத்தது

ராம் அப்பண்ணசாமி

இன்று (செப்.09) காலை சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்துக்கு தமிழக அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். மைதானத்தின் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்துக்கு தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர். பல வருடங்களாக கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய குத்தகைத் தொகையைச் செலுத்தாதால் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

1946-ல் அன்றைய மெட்ராஸ் மாகாண அரசுடன் கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் மேற்கொண்ட 99 வருட நில ஒப்பந்தம் 2045-ல் நிறைவடைய உள்ளது. ஆனால் குத்தகையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் ரூ. 870 கோடி குத்தகைத் தொகையை அரசுக்குச் செலுத்தாமல் நிலுவையில் வைத்தது.

இதனைத் தொடர்ந்து நிலுவைத் தொகை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செப்.06-ல் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவில், நிலுவைத் தொகை செலுத்தாத காரணத்தால் ரேஸ் கோர்ஸ் மைதானத்தை சீல் வைக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

இதை அடுத்து கிண்டி, மைலாப்பூர், சோழிங்கநல்லூர் தாசில்தார்கள் முன்னிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் 80 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்துக்கு இன்று காலை சீல் வைக்கப்பட்டது. ரேஸ் கோர்ஸ் மைதானத்துக்கு வெளியே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதைத் தடுக்க காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.