பள்ளி மாணவர்கள் - கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

தமிழக பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு!

வகுப்பறையில் மாணவர்களை 15 நாள்களுக்கு ஒருமுறை வரிசை மாற்றி அமரவைக்கவேண்டும்.

ராம் அப்பண்ணசாமி

பள்ளி மாணவர்களிடம் சாதிய மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள் அடிப்படையில் வன்முறைகள் உருவாகுவதைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்க்கவும், பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச. கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியதாவது,

`6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளை மையமாகக்கொண்டு நன்னெறி வகுப்புகள் வாரந்தோறும் நடத்தப்படவேண்டும்.

இலக்கியம், வினாடி வினா, நூலகம், வானவில் மன்றம் உள்ளிட்ட மன்றங்களில் மாணவர்கள் பங்கேற்க வழிசெய்யவேண்டும்.

பள்ளி மாணவர்களின் சாதிப் பெயர்களை, ஆசிரியர்கள் ரகசியமாக வைக்க வேண்டும். மாணவர்களின் சாதி வருகை பதிவேட்டில் எந்த காரணம் கொண்டும் குறிப்பிடக்கூடாது. மாணவர்களின் சாதி பெயரை ஆசிரியர்கள் மறைமுகமாகக்கூட அடைப்புக் குறிக்குள் குறிப்பிடக்கூடாது.

வகுப்பறையில் மாணவர்களை 15 நாள்களுக்கு ஒருமுறை வரிசை மாற்றி அமரவைக்கவேண்டும்.

மாணவர்களின் உதவித்தொகை குறித்த விவரங்களை வகுப்பறைகளில் அறிவிக்கக்கூடாது.

சாதியை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் அணியத் தடை விதிக்கவேண்டும். சாதிய குறியீடுகளை வெளிப்படுத்தும் வகையில் சைக்கிளில் வண்ணம் அடித்து வருவதையும் தடை செய்யவேண்டும். மாணவர்கள் தடையை மீறினால் பெற்றோருக்கு அறிவுறுத்தி ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாணவர்களுக்கு பள்ளி அளவில் வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்.

பள்ளிகளில் தலைமையாசிரியர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், 1 எஸ்.எம்.சி. குழு உறுப்பினர் மற்றும் 1 பணியாளர் ஆகியோரைக்கொண்ட `மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு’ அமைக்கப்படவேண்டும்.

முக்கியமாக பாலியல் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் வந்தால், காவல்துறைக்கு உடனே தகவல் தெரிவிக்கப்படவேண்டும்.

பள்ளிகளில் சாதிய பிரச்னைகளைக் கண்காணிக்க மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்படவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.