கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

சினிமா டிக்கெட் விலையில் வரி விகிதம் குறைப்பு: சிறு திரையரங்குகள் மகிழ்ச்சி! | GST | Cinema Ticket Rates |

ரூ. 100 மற்றும் அதற்கு குறைவாக உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி 5% ஆக குறைப்பு...

கிழக்கு நியூஸ்

நாடு முழுவதும் ரூ.100 மற்றும் அதற்கு குறைவான விலை உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது சிறு திரையரங்குகளுக்கு நிம்மதி அளித்துள்ளது.

நாட்டில் நகரமயமாக்கப்பட்ட பல பகுதிகளில் பல திரைகளைக் கொண்ட மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், இன்னும் சில பகுதிகளில் ஒரு திரையைக் கொண்ட சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் இயங்கி வருகின்றன. அவற்றின் எதிர்காலத்தைக் காக்கும் வகையில், நேற்று அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி குழு கூட்ட முடிவில் முக்கிய முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ. 100 அல்லது அதற்குக் குறைவாக விலை உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 12%-லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ரூ. 100-க்கு மேல் உள்ள டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 18% ஆகவே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவேறு வரி விகிதங்கள், திரைப்பட ரசிகர்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ப நன்மை பயக்கும் வகையில் அமைந்துள்ளது. இம்முடிவு குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள திரையரங்குகளில் பெரும்பாலும் டிக்கெட் விலை ரூ.100-க்கு குறைவாகவே இருக்கும் திரையரங்குகளுக்குப் பெருமளவில் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, தனித்திரை திரையரங்குகள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றன. மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளின் வருகை, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் வளர்ச்சி மற்றும் அதிகப்படியான பராமரிப்புச் செலவுகள் போன்றவற்றால் பல திரையரங்குகள் மூடப்பட்டன. இந்தச் சூழலில், டிக்கெட் விலையைக் குறைத்து, ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வரவழைக்க இந்த ஜிஎஸ்டி குறைப்பு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. மலிவான டிக்கெட் விலைகள், திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றம் வரும் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Cinema tickets | Cinema Theatre | GST | GST Rates reduced | Single screen theatres | Cinema ticket tax rates reduced