"Did nothing for Tamilians in 10 years, now coming to seek votes": Chief Minister MK Stalin attacks PM Modi 
தமிழ்நாடு

ஜிஎஸ்டி வரி அல்ல, வழிப்பறி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

"வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது."

கிழக்கு நியூஸ்

சரக்கு மற்றும் சேவை வரி, ஒரு வழிப்பறி என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர் தரப்பினர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் வாக்கு சேகரித்து கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஜிஎஸ்டி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், இதை வழிப்பறி என்று குறிப்பிட்டுள்ளார்.

"தன் பிணத்தின் மீதுதான் ஜிஎஸ்டியை அமல்படுத்த முடியும்" என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், "ஜிஎஸ்டி பொருளாதாரச் சுதந்திரம்" என்று 'ஒரே நாடு ஒரே வரி' கொண்டு வந்தார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி!

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா? ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், ரசீதில் உள்ள ஜிஎஸ்டி-யைப் பார்த்து புலம்புகின்றனர்!

அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.