தமிழ்நாடு

பட்டாசு தொழிலாளர்கள் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்

புதிய ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்துவைத்து, ஆட்சியரின் இருக்கையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை அமர வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

ராம் அப்பண்ணசாமி

பட்டாசு ஆலை தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்கள் குழந்தைகளின் கல்விச் செலவை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.10) அறிவித்துள்ளார்.

2 நாள் அரசு முறை சுற்றுப் பயணமாக விருதுநகர் மாவட்டத்துக்கு நேற்று (நவ.9) சென்றார் முதல்வர் ஸ்டாலின். மதுரை-விருதுநகர் எல்லையான சத்திரபெட்டியபட்டியில் அவருக்கு பிரமாண்ட வரவேற்று அளிக்கப்பட்டது.

பிற்பகல் 1 மணி அளவில் விருதுநகரை அடுத்த கன்னிசேரிபுதூர் மேலசின்னையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலைக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டார் முதல்வர் ஸ்டாலின். அப்போது அங்கிருந்த தொழிலாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். வெடி விபத்தில் பாதிக்கப்படும் பட்டாசு தொழிலாளர்களின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும் என அவர்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.

விருதுநகர் சுற்றுப்பயணத்தின் 2-ம் நாளான இன்று (நவ.10) விருதுநகரில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின். ஆட்சியர் இருக்கையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை முதல்வர் அமர வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், `பட்டாசு ஆலை தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்கள் குழந்தைகளின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும்’ என்றார். மேலும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரூ. 350 கோடியில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கப்டும் என அறிவித்தார்.

இதனை அடுத்து, ரூ. 98 கோடி மதிப்பில் நிறைவுபெற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின், 57,556 பயனாளிகளுக்கு ரூ. 417 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.