தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாக்களை கடந்த ஜன.9-ல் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் கடுங்காவல் தண்டனை அல்லது மரண தண்டனையும், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் கடுங்காவல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையும், தொடர்ந்து பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது கடுங்காவல் ஆயுள் தண்டனையும் விதிக்க இந்த சட்டதிருத்த மசோதாக்களில் வழிவகை செய்யப்பட்டன.
மேலும், பெண்கள் மீது ஆசிட் வீசி கொடுங்காயம் ஏற்படுத்தினால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையும், ஆசிட் வீசுவதாக மிரட்டினால் அபராதத்துடன் 10 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் இந்த சட்டத்திருத்த மசோதாக்களில் தெரிவிக்கப்பட்டன.
சட்டத்திருத்த மசோதாக்கள் மீதான அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு, அவை சட்டப்பேரவையில் நிறைவேறின. இதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்கு இரு சட்டத்திருத்த மசோதாக்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது இந்த சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் ஆளுநர் ரவி. இதனை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இரு சட்டத்திருத்த மசோதாக்களும் அனுப்பப்படவுள்ளன.