தமிழ்நாடு

அரசுப் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: பி. வில்சன் எம்.பி.

தமிழக அரசு நியமிக்கும் நபரே இனி வேந்தராக இருப்பார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் நாங்கள் வாதாடுவோம்.

ராம் அப்பண்ணசாமி

தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதால், இன்று முதல் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் நீக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞரும், எம்.பி.யுமான பி. வில்சன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 8) தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக சென்னையில் இன்று (ஏப்ரல் 8) செய்தியாளர்களை சந்தித்து பி. வில்சன் கூறியதாவது,

`சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மற்றும் தமிழக அரசால் அனுப்பப்பட்ட கோப்புகள் போன்றவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்த காரணத்தால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2023-ல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு இந்த மசோதாக்கள் இயற்றி அனுப்பப்பட்டு நிலுவையில் இருந்தன. ஆளுநர் இவற்றுக்கு ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றமே இவற்றுக்கு ஒப்புதல் அளித்து அவை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இனி வரும் காலங்களில் ஆளுநர்கள் மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படியே நடந்துகொள்ளவேண்டும், அதை மீறி நடந்துகொள்ளக்கூடாது என்றும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த காலகட்டத்திற்கு ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்கலாம் என்றும் இந்த வழக்கில் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 4-5 பிரிவுகளில் எங்கெல்லாம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவைப்படுகிறதோ அந்த நேரத்தில்தான் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுயாட்சியும் நிலைநாட்டப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்பட்டு, அதற்கு ஆளுநர்கள் இடையூறாக இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம் என்பது உறுதியாகியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆளுநருக்குப் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதால், இன்று முதல் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் நீக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு நியமிக்கும் நபரே இனி வேந்தராக இருப்பார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் நாங்கள் வாதாடுவோம்' என்றார்.