கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

பயத்தில் ஆளுநர்: மாற்றுத் திறனாளிகள் மசோதாக்களுக்கான ஒப்புதல் குறித்து முதல்வர் கருத்து

கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளின் உறுப்பினர்களாக செயல்பட 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

ராம் அப்பண்ணசாமி

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் இரண்டு சட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளதை முன்வைத்து முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடாமல், தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான இரு சட்டத் திருத்த மசோதாக்களை கடந்த ஏப்ரல் 16 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இதன்படி, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் உறுப்பினர்களாக செயல்பட சுமார் 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் விளக்கமளித்தார்.

சட்டப்பேரவை விவாதத்திற்குப் பிறகு, கடந்த ஏப்ரல் 29-ல் இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்கு இந்த மசோதாக்களும் அனுப்பிவைக்கப்பட்டன.

இந்நிலையில், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக இன்று (ஜூன் 3) செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,

`அது (ஏற்கனவே) எதிர்பார்த்ததுதான்; அதில் ஒன்றும் பிரச்னையில்லை. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பியதன் பேரில் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஒரு வேளை நீதிமன்றத்திற்கு நாங்கள் சென்றுவிடுவோம் என்று எண்ணி அவர் ஒப்புதல் அளித்திருக்கலாம்’ என்றார்.