தமிழ்நாடு

தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஆசிரியை குத்திக் கொலை

இதுதொடர்பாக மதன் என்பவரைக் காவல் துறையினர் முதற்கட்டமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிழக்கு நியூஸ்

தஞ்சாவூரில் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் ரமணி (26). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். மதன் என்பவர் ஆசிரியை ரமணியை ஒருதலையாகக் காதலித்ததாகத் தெரிகிறது. மதன் வீட்டாரும் பெண் கேட்டு ரமணி வீட்டாரிடம் முறையிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு ஆசிரியை ரமணி தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரமணி பாடம் நடத்தி வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மதன் என்பவர் ரமணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பேச்சுவார்த்தை வாக்குவாதமாக முற்றியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து, இன்னும் உறுதிபடத் தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு ஆசிரியை ரமணியை மதன் குத்தியுள்ளார். மாணவர்கள், சக ஆசிரியர்கள் ரமணியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஆசிரியை ரமணி உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக மதன் என்பவரைக் காவல் துறையினர் முதற்கட்டமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.