கோப்புப்படம் 
தமிழ்நாடு

நீட் வந்த பிறகே அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளார்கள்: அண்ணாமலை

"முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?"

கிழக்கு நியூஸ்

நீட் தேர்வு வந்த பிறகே அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளார்கள் என்ற உண்மை வெளிப்பட்டால் திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனிடையே, கல்வி விருது விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், நீட் தேர்விலிருந்து விலக்களிப்பது உடனடித் தீர்வு என்றும், கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுதான் நிரந்தரத் தீர்வு என்றும் பேசினார்.

இந்த நிலையில் நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளப் பக்கத்தில் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, ஏகே ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை, தமிழ்நாடு பாஜக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.

நீட் தேர்வு வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன்? முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?

நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர் என்ற உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே, அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா?" என்று குறிப்பிட்டுள்ளார்.