மாநிலம் முழுவதும் 2,299 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர்களின் (VAO) கீழ் பணிபுரியும் அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் என்று என்று அழைக்கப்படுகின்றனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர்கள் வழியாக அந்தந்த மாவட்டங்களில் கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட்டன.
இந்நிலையில், மாநில அளவில் கிராம உதவியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை புதிய விதிமுறைகளை அண்மையில் வகுத்திருந்தது. இதன்படி 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழை பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் 10 மதிப்பெண்கள், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனம் (உரிமத்துடன்) ஓட்டினால் 10 மதிப்பெண்கள், தமிழ் வாசிப்பு மற்றும் திறனறிவு தேர்வுக்கு 30 மதிப்பெண்கள், அந்தந்த கிராமம் மற்றும் தாலுகாவிற்கு உள்பட்ட பகுதியில் வசித்தால் 35 மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு 15 மதிப்பெண்கள் என அதிகபட்சமாக ஒரு தேர்வருக்கு 100 மதிப்பெண்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டது.
மேலும், காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களின் பட்டியலை மாவட்ட இணையதளங்களில் வெளியிட அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், புதிய விதிமுறைகளின்படி 2,299 கிராம உதவியாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தி தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை வெளியிட்டுள்ளது.