கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

இனி மூன்று ஷிப்டில் மருத்துவப் பணியாளர்கள்: அரசாணை

முதல் ஷிப்டில் 50 சதவீதப் பணியாளர்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஷிப்டில் தலா 25 சதவீதப் பணியாளர்களும் பணியமர்த்தப்படவுள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் மருத்துவப் பணியாளர்கள் மூன்று ஷிப்ட் முறையில் பணியமர்த்தப்படுவதற்கான அரசாரணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு ஷிப்ட் முறையிலேயே பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வந்தார்கள். இந்த முறை தற்போது மாற்றப்பட்டு, மூன்று ஷிப்ட் முறையில் பணியமர்த்தப்படும் வகையில் பணி நேரம் அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலிய உதவியாளர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவமனைப் பணியாளர் மற்றும் துப்புறவுப் பணியாளர்கள் இனி மூன்று ஷிப்ட் முறையில் பணியாற்றவுள்ளார்கள்.

முதல் ஷிப்ட் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மூன்றாவது ஷிப்ட் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலும் இருக்கும்.

இதுதொடர்புடைய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முதல் ஷிப்டில் 50 சதவீதப் பணியாளர்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஷிப்டில் தலா 25 சதவீதப் பணியாளர்களும் பணியமர்த்தப்படவுள்ளார்கள்.