சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்குப் போதிய சிகிச்சையை சரிவர அளிக்கவில்லை எனக் கூறி இவருடைய மகன், பணியிலிருந்த அரசு மருத்துவர் பாலாஜி என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக, பெண்ணின் மகன் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு அரசு மருத்துவரைக் குத்தியுள்ளார்.
இதில் நிலைகுலைந்த அரசு மருத்துவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் குத்திய இளைஞரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகிறார்.