கோப்புப்படம் 
தமிழ்நாடு

பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்: அமைச்சர் சொன்ன தகவல்! | Anbil Mahesh

பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் 12-வது நாளாக இன்றும் நீடித்தது.

கிழக்கு நியூஸ்

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் அலுவலகம் மூலம் நல்ல செய்தி கிடைக்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 2012-ல் பல்வேறு பாடங்களைப் பயிற்றுவிக்க, 12 ஆயிரம் பேர் பகுதி நேர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு வாரத்தில் மூன்று நாள்கள் வேலை. தொகுப்பூதியமாக மாதம் ரூ. 12,500 வழங்கப்பட்டு வருகிறது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அறிவித்தது.

இருந்தபோதிலும், பகுதிநேர ஆசிரியர்களின் பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளது. கடந்த ஜூலை 8 முதல் பகுதிநேர ஆசிரியர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனங்கள் எழுந்து வந்தன.

இந்தப் போராட்டம் 12-வது நாளாக இன்றும் நீடித்தது. போராட்டத்தைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் பலர் சாலை மறியலிலும் ஈடுபட்டார்கள். காவல் துறையினர் இவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் ஆசிரியர்கள் போராட்டம் பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

"பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து 7, 8 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுசார்ந்து, அதிகாரிகளைச் சந்தித்து சில கோரிக்கைகளையும் வைத்துள்ளார்கள். கண்டிப்பாக முதல்வர் அலுவலகம் கண்டிப்பாக நல்ல செய்தியைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

அமைச்சர் அன்பில் மகேஸின் வாக்குறுதியைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Anbil Mahesh | Anbil Mahesh Poyyamozhi | Part-Time teachers protest