ANI
தமிழ்நாடு

85 ஆயிரத்தைக் கடந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை! | Gold Rate |

சுப நிகழ்வுகளுக்குத் தங்கம் வாங்க எண்ணியவர்கள் அதிர்ச்சி...

கிழக்கு நியூஸ்

தங்கத்தின் விலை இன்று இருமுறை உயர்ந்து வரலாறு காணாத அளவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 85 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க எண்ணியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

தங்கத்தின் விலை சமீபநாள்களாகவே கடுமையான உயர்வைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக ஜனவரி மாதம் முதல் தங்கம் விலை அவ்வப்போது புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 50% வரி விதித்த அமெரிக்கா, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, சர்வதேச அரசியல் சூழல் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது.

ஜனவரி 1, 2025-ல் ரூ. 57,200-க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் விலை, பிப்ரவரியில் 60 ஆயிரத்தைத் தாண்டியது. ஏப்ரலில் 70 ஆயிரத்தைத் தாண்டி ஜூலையில் ரூ. 75 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது. செப்டம்பர் 6 அன்று வரலாற்றில் முதல்முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 80 ஆயிரத்தைத் தொட்டது. இந்நிலையில் 17 நாள்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 5,000 உயர்ந்து, முதல்முறையாக ரூ. 85 ஆயிரத்தை எட்டியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ. 1,680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் வரலாறு காணாத அளவில் ரூ. 85,120-க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கம் ரூ. 10,640-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையும் இந்த மாதம் தான் ரூ. 10 ஆயிரத்தைக் கடந்தது.

இதனால் சுப நிகழ்வுகளுக்குத் தங்கம் வாங்க எண்ணியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.