ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ. 80 ஆயிரத்தைக் கடந்தும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 10,000 கடந்தும் விற்பனையாவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை அண்மை நாள்களாகவே கடுமையாக உயர்வைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக 2025 தொடங்கியதிலிருந்து தங்கம் விலை அவ்வப்போது புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 50% வரி விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.
இது தங்கத்தின் விலையிலும் எதிரொலித்துள்ளது.
ஜனவரி 1, 2025-ல் ரூ. 57,200-க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் விலை, பிப்ரவரியில் 60 ஆயிரத்தைத் தாண்டியது. ஏப்ரலில் 70 ஆயிரத்தைத் தாண்டி ஜூலையில் ரூ. 75 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது. இன்று செப்டம்பர் 6 அன்று வரலாற்றில் முதல்முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 1,120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் வரலாறு காணாத அளவில் ரூ. 80,040-க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கம் ரூ. 140 உயர்ந்து ரூ. 10,005-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 10 ஆயிரத்தைக் கடந்ததும் இதுவே முதல்முறை.
இதனால் சுப நிகழ்வுகளுக்குத் தங்கம் வாங்க எண்ணியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.