கள்ளக்குறிச்சி ANI
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தொடங்கிய விசாரணை

விஷச்சாராயம் குடித்து இதுவரை 49 நபர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

யோகேஷ் குமார்

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையில் விசாரணை தொடங்கியது.

கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் விஷச்சாராயம் குடித்து முதலில் உயிரிழந்துள்ளார். சுரேஷின் இறுதிச்சடங்கிற்குச் சென்றவர்களில் பலர் பாக்கெட் விஷச்சாராயம் குடித்து, அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். விஷச்சாராயம் குடித்த 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 49 நபர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோகுல்தாஸ் தலைமையில் இன்று விசாரணை தொடங்கியது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து விவரங்களை கேட்டறிந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.