கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் நிறுவப்பட்ட கண்ணாடி இழைக் கூண்டுப் பாலத்தை இன்று (டிச.30) திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
கன்னியாகுமரி கடற்பகுதியில் விவேகானந்தர் பாறைக்கு அருகே இருந்த மற்றொரு பாறையில், கடந்த 1999-ல் அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் முன்னெடுப்பின் கீழ் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
பணிகள் நிறைவுபெற்ற பிறகு, கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ல் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார் முதல்வர் கருணாநிதி. திறப்பு விழாவில், அன்றைய கல்வி அமைச்சர் க. அன்பழகன், செய்தித்துறை அமைச்சர் முல்லைவேந்தன், தமாக தலைவர் ஜி.கே. மூப்பனார், சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கன்னியாகுமரியின் முதன்மை அடையாளச் சின்னமாக விளங்கும் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில், தமிழக அரசால் ரூ. 37 கோடி செலவில் கடல்சார் கண்ணாடி இழைக் கூண்டுப் பாலம் அமைக்கப்பட்டது.
திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாட்டங்களை முன்னெடுத்துள்ளது தமிழக அரசு. இதன் ஒரு பகுதியாக, கப்பல் வழியாக திருவள்ளுவர் சிலைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் இந்தப் புதிய கண்ணாடி இழைக் கூண்டுப் பாலத்தை இன்று திறந்துவைத்தார்.
இதைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலை வளாகத்தில் அமைந்துள்ள பூம்புகார் விற்பனையகத்தையும் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.