படம்: https://www.facebook.com/profile.php?id=61558864412101
தமிழ்நாடு

பாமக இளைஞர் சங்கத் தலைவராக தமிழ்குமரன் நியமனம்: ராமதாஸ் | Ramadoss | PMK |

தமிழ்குமரனுக்கு ஏற்கெனவே ஒருமுறை பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

கிழக்கு நியூஸ்

பாமக இளைஞர் சங்கத் தலைவராக தமிழ்குமரன் நியமிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், செய்தியாளர்கள் முன்னிலையில் தமிழ்குமரனுக்கு நியமனக் கடிதத்தைக் கொடுத்தார்.

ராமதாஸ் கூறியதாவது:

"இன்று ஒரு மகிழ்ச்சியான நாள். என் நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போகும் நாள். நான் அதிகம் நேசிக்கின்ற பிள்ளைகளில் ஒரு பிள்ளை தமிழ்க்குமரன். மாநில இளைஞர் சங்கத் தலைவராக தமிழ்குமரனை நியமனம் செய்கிறேன்" என்று ராமதாஸ் அறிவித்தார்.

பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இரு தரப்பும் நிர்வாகிகளை நியமிப்பதும் நீக்குவதுமாக உள்ளார்கள். கட்சியின் அதிகாரம் அன்புமணி ராமதாஸ் வசம் இருப்பதாக பாமக செய்தித்தொடர்பாளர் கே. பாலு தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகிறார்.

அண்மையில் சட்டப்பேரவைச் செயலரை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே. பாலு, பனையூர் அலுவலகத்தில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது பற்றியும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் சட்டப்பேரவைச் செயலரிடம் சமர்ப்பித்துள்ளது பற்றியும் விளக்கினார்.

இதன்படி, பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டப்பேரவைக் குழுத் தலைவராகச் செயல்பட்டு வந்த ஜி.கே. மணி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். கட்சியின் புதிய சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு தான் இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பை வழங்கியுள்ளார் ராமதாஸ்.

தமிழ்குமரனுக்கு ஏற்கெனவே ஒருமுறை பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. ராமதாஸ் நியமிக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக தமிழ்குமரன் ராஜினாமா செய்தார்.

PMK | Ramadoss | Tamil Kumaran | Anbumani Ramadoss |