கடலூரில் ரயில் மோதி பள்ளி வாகனம் விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு காரணமாக கூறப்படும் செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட்டை கடந்த ஜூலை 8 அன்று காலை 7.30 மணி அளவில் கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியது. இதில், பள்ளி வேன் 50 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு கடுமையாக சேதமடைந்தது.
பள்ளி வேனில் இருந்த மாணவர்கள் நிமிலேஷ் (12), சாருமதி (16), செழியன்(15) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். நிமிலேஷின் அண்ணன் விஷ்வேஸ் (16) மற்றும் வேன் ஓட்டுநர் சங்கர் (47) ஆகியோர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் அப்போது பணியில் இருந்த கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா, கேட்டை மூடாமல் இருந்ததே இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்று அருகிலிருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள். மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த வேன் ஓட்டுநர் சங்கர் இந்த தகவல் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையே விபத்து நடைபெற்ற சில நேரத்திற்குள்ளாகவே சம்பவ இடத்தில் வைத்து பங்கஜ் ஷர்மாவை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் நடத்தப்பட்ட விரிவான விசாரணைக்குப் பிறகு தற்போது பங்கஜ் ஷர்மா பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.