சென்னை திருவொற்றியூரிலுள்ள தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக் கசிவு ஏற்பட்டதால், மாணவிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சென்னை திருவொற்றியூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த அக்டோபர் 25 அன்று வாயுக் கசிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், ஏறத்தாழ 35-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. 3 பேர் மயக்கமடைந்ததாகவும் கூறப்பட்டது. இவர்கள் அனைவரும் திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு இரு மாணவிகள் ஸ்டான்லி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களுடையக் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். இதுதொடர்பாக தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தார்கள். வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். தாசில்தார் சகாயராணியும் பள்ளிக்கு நேரடியாகச் சென்றார்.
அன்றைய நாள் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வண்ணாரப்பேட்டை ஆணையர், வாயுக் கசிவானது பள்ளியிலுள்ள ஆய்வகத்திலிருந்து ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றார். மேலும், மூன்றாவது தளத்திலுள்ள மாணவர்களுக்கு மட்டுமே மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் இதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், இதற்கான காரணம் என்பது கண்டறியப்படாமலே இருந்து வந்தது.
இந்த நிலையில் 10 நாள்களுக்குப் பிறகு திருவொற்றியூரிலுள்ள தனியார் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இன்றும் வாயுக் கசிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக மாணவிகள் மீண்டும் மயக்கமடைந்திருக்கிறார்கள். 8 முதல் 10 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, இந்தப் பள்ளியானது தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மாநகராட்சி வடக்கு துணை ஆணையர், மாவட்டக் கல்வி கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பள்ளியில் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்.