சென்னை தாம்பரத்துக்கு அருகே உள்ள பொத்தேரியில் செயல்பட்டுவரும் தனியார் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், காவல்துறையினர் இன்று (ஆகஸ்ட் 31) சோதனை மேற்கொண்டு போதை வஸ்துக்களைப் பறிமுதல் செய்தனர்.
பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தைச் சுற்றி இருக்கும் மாணவர்கள் விடுதியில் போதை வஸ்துக்களின் பயன்பாடு குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தாம்பரம் கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, தாம்பரம் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் தலைமையில் இன்று காலை 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நான்கு மணி நேரமாக நடைபெற்ற இந்தச் சோதனையின் முடிவில், கஞ்சா பவுடர், கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள், பாங்கு, ஸ்மோக்கிங் பாட், ஹூக்கா மெஷின், ஹூக்கா பவுடர் உள்ளிட்ட போதை வஸ்துக்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சோதனையின் முடிவில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துச் சென்று அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்த ஆரம்பித்தனர் காவல்துறையினர். மாணவர்கள் யாரிடம் இருந்து போதை வஸ்துக்களைப் பெற்றார்கள் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கல்லூரி மாணவர்களை போதைப் பழக்கத்திலிருந்து விடுபட வைக்கவும், போதை வஸ்துக்களின் விற்பனை, பயன்பாடு மற்றும் புழக்கத்தைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் இந்த அதிரவு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.