மாதிரி படம்
தமிழ்நாடு

அம்பானி இல்ல திருமணக் கொண்டாட்டத்தில் திருட்டு: திருச்சியைச் சேர்ந்த 5 பேர் கைது

ஒருவரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 10 லட்சம், லேப்டாப் போன்றவை திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

யோகேஷ் குமார்

ஆனந்த் அம்பானி திருமணக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட 5 நபர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்சண்ட்டின் மகள் ராதிகா மெர்சண்டுக்கும் கடந்த ஜனவரி மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து குஜராத் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3 வரை திருமணத்துக்கு முந்தைய விழா நடைபெற்றது. இதில் உலகளவில் புகழ்பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற பலரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக திருச்சியைச் சேர்ந்த 5 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அம்பானி வீட்டு திருமணத்திற்கு வந்த ஒருவரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம், லேப்டாப் போன்றவை திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல் துறையினர் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த 5 பேரை தில்லியில் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. திருட்டுச் சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.