தமிழ்நாடு

உண்மைக்குப் புறம்பான செய்திகள்: தவெக குற்றச்சாட்டும், ஜி ஸ்கொயர் விளக்கமும்

இது உங்கள் கட்சி மற்றும் எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை களங்கப்படுத்தக்கூடும்.

ராம் அப்பண்ணசாமி

காஞ்சிபுரம் மாவட்டம் பண்ணூர், திருப்பந்தியூர், திருமேனி குப்பம் கிராமங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு நிலம் இருப்பதாக தவெக செய்தித் தொடர்பாளர் ஜெகதீசன் அளித்த குற்றச்சாட்டிற்கு ஜி ஸ்கொயர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமானநிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 900 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த வாரம் பரந்தூருக்கு சென்றார் தவெக தலைவர் விஜய்.

உள்ளூர் மக்கள் எதிர்ப்பையும் மீறி பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மாநில அரசு முயற்சி செய்கிற்து என்றால், அதற்கு வேறு ஏதோ காரணம் இருப்பதாக, பரந்தூரில் பேசினார் விஜய். இதனை அடுத்து, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவிருக்கும் பகுதியில் எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை என ஜி ஸ்கொயர் நிர்வாகம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், கடந்த ஜன.20 அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான விவாத மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தவெக செய்தித் தொடர்பாளர் ஜெகதீசன், காஞ்சிபுரம் மாவட்டம் பண்ணூர் கிராமத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமாக 900 ஏக்கர் நிலம் உள்ளதாக கருத்து தெரிவித்திருந்தார்.

ஜெகதீசன் குற்றச்சாட்டு தொடர்பாக ஜி ஸ்கொயர் நிர்வாகம் இன்று (ஜன.28) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

`எங்கள் வணிகப் போட்டியாளர்கள் மூலம் உண்மைக்குப் புறம்பான பல செய்திகள் பல்வேறு தளங்களில் பரப்பப்படுகின்றன. இது உங்கள் கட்சி மற்றும் எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை களங்கப்படுத்தக்கூடும். தவெக முன்னணித் தலைவர்களும், தொண்டர்களும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுகொள்கிறோம்.

பண்ணூர் கிராமத்தில் மொத்தமே 800 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளன. மேலும் பண்ணூர், திருப்பந்தியூர், திருமேனி குப்பம் கிராமங்களில் 2006 முதல் 2011 வரை அநேக நிலங்களின் பதிவுகள் நடந்து முடிந்துவிட்டன. 2012-ல் ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடங்கப்பட்டது. எனவே ஜி ஸ்கொயர் நிறுவனம் அங்கு நிலங்களை கையகப்படுத்தியுள்ளது என்கிற வாதம் உண்மையற்றது.

பண்ணூர் கிராமத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு எந்த நிலமும் இல்லை. இதற்குப் பிறகும் மேற்கூறிய கிராமங்களில் எங்கள் நிறுவனத்தின் பெயரிலோ அல்லது எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரிலோ பண்ணூர், திருப்பந்தியூர், திருமேனி குப்பம் கிராமங்களில் நிலங்கள் உள்ளதை யாராவது நிரூபித்தால் அது அவருக்கு இலவசமாக மாற்றிக்கொடுக்கப்படும்.

ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் வெற்றிக்கு அதன் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களின் கடின உழைப்பு மட்டுமே காரணம். எங்கள் நிறுவனத்திற்கும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லை. எங்கள் விளக்கத்தை தவெக உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தவெக தலைவர் விஜய் சமுதாயத்திற்கு ஆற்றிவரும் மக்கள் பணி வெற்றிபெற வாழ்த்துகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.