சென்னையிலிருந்து புறப்பட்ட டீசல் டேங்கர் சரக்கு ரயில் தீவிபத்துக்குள்ளானதில் 10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூரிலிருந்து டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் சரக்கு ரயில் இன்று அதிகாலை 5 மணியளவில் திருவள்ளூர் அருகே தீவிபத்துக்குள்ளானது. முதலில் ஒரு டேங்கரில் தீ பற்றியுள்ளது. பிறகு படிப்படியாக அருகிலிருந்த டேங்கருக்கும் தீ பரவியுள்ளது.
தீ விபத்தால், விண்ணைமுட்டும் அளவுக்கு புகை சூழ்ந்தது. உள்ளூர் மக்கள் உதவியுடன் சில டேங்கர் சரக்கு பெட்டிகள் தனியாகப் பிரித்து தள்ளி வைக்கப்பட்டன. இந்தத் தீ விபத்தால் சென்னை அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், தீயணைப்புத் துறையினருக்கு தீயை அணைப்பது சவாலானதாக இருந்தது. தீ அணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, விபத்து நடைபெற்ற இடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த இடத்திலிருந்து வீடுகள் தள்ளி இருந்ததால், பெரியளவில் பாதிப்பு இல்லை. சுமார் 18 பெட்டிகள் முற்றிலுமான எரிந்து நாசமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தீ விபத்து காரணமாக சென்னையிலிருந்து புறப்படவிருந்த, புறப்பட வேண்டிய பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு வரவுள்ள பல்வேறு ரயில்களும் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடியில் ஆங்காங்கே நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீவிபத்தில் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை.
ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், தியாகராய நகர் ஆகிய இடங்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் (எம்டிசி) கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக எம்டிசி அறிவித்துள்ளது.
மேலும் ஆவடி - திருவள்ளூருக்கு இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்றும் திருவள்ளூர் மற்றும் ஆவடி ஆகிய இடங்களில் உள்ள முக்கியப் பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் எம்டிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.