தமிழக பாஜகவிற்குப் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க, நாளை (ஏப்.11) விருப்ப மனு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய தலைவர் நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கடந்த ஓரிரு வாரங்கள் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தமிழக பாஜகவிற்குப் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான விருப்ப மனு வழங்கல் தொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவரும், கட்சியின் மாநில தேர்தல் அதிகாரியுமான எம். சக்ரவர்த்தி வெளியிட்ட அறிவிக்கையில் கூறியதாவது,
`பாஜகவின் அமைப்பு பருவ தேர்தல் இறுதிக் கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்பொழுது இறுதியாக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது.
மேற்கண்ட தேர்தலுக்கான விருப்பமனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நாளை (ஏப்.11) வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மாநில தலைவருக்கான தேர்தல்: மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
1) மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார்.
2) கட்சியில் தேர்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேரிடம் இருந்து எழுத்துபூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல்: தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
1) மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன்மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும்’ என்று குறிப்பட்டுள்ளது.
மாநிலத் தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புபவர்கள், குறைந்தது 10 வருடங்கள் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்கவேண்டும் என்று அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், தற்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர், மாநிலத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மேலும், இது தொடர்பாக அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியபோது, `பாஜக மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. எனவே நாளை விருப்ப மனுவைத் தாக்கல் செய்யப்போவதும் இல்லை’ என்றார்.